என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
- டெல்லி கணேசுக்கு தங்கம் என்ற மனைவியும் மகா கணேஷ் என்ற மகனும் பிச்சு, சாரதா ஆகிய மகள்களும் உள்ளனர்.
- டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தன.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே டெல்லி கணேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. மரணம் அடைந்த டெல்லி கணேசுக்கு தங்கம் என்ற மனைவியும் மகா கணேஷ் என்ற மகனும் பிச்சு, சாரதா ஆகிய மகள்களும் உள்ளனர். மகன் மகா கணேஷை கதாநாயகனாக வைத்து என்னுள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்தார்.
டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், கார்த்தி, ராதாரவி, சார்லி, செந்தில், இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, வசந்த், நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் மற்றும் நிர்வாகிகள் டெல்லி கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்ந், தவெக தலைவர் விஜய், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், நடிகர் சார்லி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் மறைந்து நடிகர் டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.






