என் மலர்
தமிழ்நாடு
டேங்கர் லாரி டிரைவர் கைது- 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு
- சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
- விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை அவினாசி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் தனியாக விழுந்து அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை நகரில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நேற்று அந்த பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
மேம்பாலத்தில் விழுந்த கியாஸ் டேங்கரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்திருந்தது தெரியவந்தது. லாரி கவிழ்ந்ததும் அவர் கீழே குதித்து தப்பினார். அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
வழக்கமாக கேரளாவில் இருந்து கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைந்து, அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள கணபதிக்கு செல்லும். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்ல எளிதான பாதையாகும். ஆனால் எரிவாயு டேங்கர் லாரியை இயக்கி வந்த டிரைவர் உக்கடம், மரக்கடை வழியாக அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.