என் மலர்
தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் சென்ற அரசு பஸ்கள் சிறைபிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

- நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
- பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செய்துங்க நல்லூரில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர்வழியாக வந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ்சுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுதொடர்ந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.
ஆனால் அதையும் அரசு பஸ் டிரைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இன்று காலை மீண்டும் நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவை குண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் மற்றொரு பஸ்சில் வந்த டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பஸ்சை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல அறிவுறுத்தினார். அதற்கு பிறகு அந்த பஸ் ஊருக்குள் சென்றது.
இதைத்தொடர்ந்து வந்த மற்றொரு பஸ்சும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் செல்ல முயன்றது. அந்த பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தால் நானே அபராதம் விதிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனியாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.