search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆள்மாறாட்டம்- ஆசிரியர் அதிரடி பணியிடை நீக்கம்
    X

    அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆள்மாறாட்டம்- ஆசிரியர் அதிரடி பணியிடை நீக்கம்

    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
    • ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.

    எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.

    எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.

    இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.

    அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.

    Next Story
    ×