search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடுங்குளிரால் மக்கள் அவதி- ஊட்டி, குன்னூரில் கொட்டி தீர்க்கும் உறைபனி
    X

    கடுங்குளிரால் மக்கள் அவதி- ஊட்டி, குன்னூரில் கொட்டி தீர்க்கும் உறைபனி

    • ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போலவே பனிகள் படர்ந்து காட்சியளிக்கின்றன.

    அதிலும் குறிப்பாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதியில் உள்ள புல்வெளி மைதானங்களில் உறைபனி படிந்து உள்ளது. இதன் காரணமாக பச்சைப்பசேலென காட்சியளிக்கும் புற்கள், தற்போது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் வெண்மையாக காணப்பட்டது.

    மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது உறைப்பனி கொட்டி கிடந்ததால் வாகனங்களும் வெள்ளை நிறமாக காட்சி அளித்தன. அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மீது கொட்டி கிடந்த உறை பனியை வாகன ஓட்டிகள் அகற்றுவதை பார்க்க முடிந்தது.

    ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து உறைப்பனியிலும் கேரட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    உறைபனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான கால நிலை நிலவுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஊட்டியின் புறநகர பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் 'கோத்தகிரி மலார்' செடிகளை கொண்டு தேயிலை தோட்டங்களை மூடிவைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஊட்டியில் ஜனவரி மாதம் இறுதிவரை உறைப்பனி தென்படும் சூழல் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு உறைபனி அதிகமாக காணப்பட்டது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் புறநகர பகுதிகளான ஜிம்கானா, ஸ்டாப் காலேஜ், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை உறை பனிப்பொழிவு கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள புல்வெளிகள் மீது உறைபனி படிந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது.

    குன்னூர் நகரில் சராசரி வெப்பநிலை 2.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×