என் மலர்
தமிழ்நாடு
வகுப்பறையில் சென்று நீங்க குடிங்க என்று அவர் சொல்லவில்லையே - கோமியம் விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து
- பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்றார்.
- கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும் என்றார்.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
ஐஐடி இயக்குனர் காமகோடி ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டை சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள்.
இவ்வாறு கூறினார்.