search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 லட்சம் பேருக்கு கட்சியில் முக்கிய பதவி- விஜய் அதிரடி விரைவில் ஆரம்பமாகிறது
    X

    3 லட்சம் பேருக்கு கட்சியில் முக்கிய பதவி- விஜய் அதிரடி விரைவில் ஆரம்பமாகிறது

    • விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.

    அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

    26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.

    இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த நுழைவுச்சீட்டுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

    2-ம் ஆண்டு விழாவில் பேசும் விஜய், கட்சி சம்பந்தமாகவும், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். எனவே விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார்? என்னென்ன அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.


    ஆண்டுவிழாவின் முடிவில் அதில் பங்கேற்பவர்களுக்கு 18 வகையான உணவு வகைகளை கொண்ட அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன் அவர்களை தனித்தனியே அழைத்தும் பேசினார். கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பெரிய பெரிய பணக்காரர்கள் வந்து மோதினார்கள். ஆனால் உங்களை நம்பி, நீங்கள் உழைத்த உழைப்பை நம்பி, மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும்' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. அதில் குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி ஆகியவையும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வேறு எந்த கட்சியிலும் இதுபோன்ற அணிகள் கிடையாது. விஜய் கட்சியில் மட்டுமே இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அனைத்து அணிகளுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுவிழா முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய்யின் அதிரடி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இதுவரை என்னென்ன மக்கள் பணிகள் செய்யப்பட்டுள்ளது இனி என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தொடர்பான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், விரைவில் விஜய் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்துவதுடன் மக்களையும் நேரடியாக சந்திக்க தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று விஜய் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×