search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரிப்பு- சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தது
    X

    தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரிப்பு- சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தது

    • ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.
    • இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பனி கொட்டி தீர்த்து வருகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது. பின்னர் இது நள்ளிரவு நேரங்களில் மழை போல கொட்டி தீர்க்கிறது. காலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு மூடுபனியின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடந்து அங்கு தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் கொட்டி தீர்த்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் உறைபனி கொட்டி வருவதால், அங்கு பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் மலர்கள் தற்போது கருக தொடங்கி உள்ளன.

    மேலும் பூங்காக்களின் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல உறைபனி படிந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா புல்வெளியில் படிந்து கிடக்கும் உறைபனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் வெம்மை ஆடைகளுடன் பூங்காக்களுக்கு வந்திருந்து அங்குள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.

    நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனியால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவிகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

    மேலும்இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் வியாபார கடைகளில் கம்பளி, போர்வைகள் உள்ளிட்ட குளிர்கால ஆடை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×