என் மலர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? - ஏன் அஞ்சுகிறீர்கள்? : முதலமைச்சரை கேள்விகளால் துளைத்த கே.பாலகிருஷ்ணன்
- மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல.
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன், மதுரை எம்.பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் தாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஆளுங்கட்சியான தி.மு.க.-வையும் அவர் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?. அ.தி.மு.க.-வோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஆளும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்ற அடிப்படையில் பா.ஜ.க., பா.ம.க.-வை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார் என்று பார்த்தால், முதலமைச்சரையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.