search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவரப்பேட்டை ரெயில் விபத்து- ரெயில் நிலைய அதிகாரி உள்பட 4 பேரிடம் விசாரணை
    X

    கவரப்பேட்டை ரெயில் விபத்து- ரெயில் நிலைய அதிகாரி உள்பட 4 பேரிடம் விசாரணை

    • ரெயில் விபத்துக்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா? அல்லது நாசவேலையா? மனித தவறா? என பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்தது.
    • தண்டவாளத்தில் உள்ள உதிரி பாகங்கள் கழன்று கிடந்ததால் மனிதர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 11-ந்தேதி சரக்கு ரெயில் மீது மைசூரு ரெயில் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர் இழப்பு எதுவும் இல்லாமல் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் விபத்துக்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா? அல்லது நாசவேலையா? மனித தவறா? என பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்தது. நிலைய மேலாளர், நிலைய அதிகாரி உள்ளிட்ட 21 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

    கடந்த ஒரு வாரமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விசாரித்தனர். இன்று கவரப்பேட்டை நிலைய மேலாளர், கொடி அசைப்பவர், கேட் கீப்பர், நிலைய கண்காணிப்பாளர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடந்தது.

    மெக்கானிக்கல், சிவில், ஒர்க்ஸ், சிக்னல், போக்குவரத்து இயக்கம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் பாதை கண்காணிப்பாளர், ரெயில் டிரைவர், சிக்னல் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும் ரகசியமாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சி.சி.டி.வி. கேமரா, போன் அழைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தனித்தனியாக ஊழியர்களிடமும், துறை சார்ந்த விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுச்சூழல், நேரடியாக பாார்த்தவர்கள், அறிவியல் சார்ந்த சாட்சி, எக்ஸ்பேர்ட்ஸ் சாட்சி என பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வருகிறது.

    ரெயில் விபத்து நடந்ததை தொடர்ந்து ரெயில் நிலையங்களை ஒட்டிய பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார் ரெயில் பாதையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    இது தவிர அரசு ரெயில்வே போலீசாரும் ரெயில் நிலையம் மற்றும் பாதைகளை கண்காணித்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ரெயில் விபத்தை ஏற்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டது யார்? தண்டவாளத்தில் உள்ள உதிரி பாகங்கள் கழன்று கிடந்ததால் மனிதர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    Next Story
    ×