என் மலர்
தமிழ்நாடு
2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்- கேரள ஜோதிடர் அடித்து சொல்கிறார்
- சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார்.
- முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள்.
கேரள மாநிலம் ஸ்ரீசூரிய மங்கலம் ஸ்ரீ பகளா முகி தேவி கோவில் குருஜி ஜோதிடப்படி 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று கணித்து கூறியிருக்கிறார். அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபலமான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஜாதகங்களை சேர்த்து அஷ்டமங்கள பிரசன்னமும் பார்த்த பலன்களைத்தான் சொல்கிறேன்.
தி.மு.க. ஜாதகப்படி 2026 அக்டோபர் மாதம் வரை சுக்கிர திசை நடக்கிறது. சுக்கிரன் லக்னத்தோடு 11-ம் இடத்தில் இருக்கிறது. ஆட்சி எப்படி கையில் வந்தது என்றால் 2021 மே மாதத்தில் சனி புத்திகாலமாக இருந்தது. அதுவும் சுக்கிரனோடு 11-ம் இடத்தில் இருந்ததால் அதிகமான சீட் வாங்கி ஆட்சி அமைக்க முடிந்தது.
2025 ஆகஸ்டு முதல் 2026 அக்டோபர் மாதம் வரைக்கும் சுக்கிர திசை காலத்தில் கேது புத்திகாலமாகும். தசாநாதனோடு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறது. சனி பார்வை, செவ்வாய் பார்வை உள்ளது.
கேது புத்தி காலத்தில் தேர்தல் வருவதால் நிச்சயமாக மறுபடியும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஆனால் சீட் குறையும். கூட்டணியில் சில கட்சிகள் வெளியே போகும். சில கட்சிகள் உள்ளே வரும்.
சீட் குறைந்தாலும் மு.க. ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார். அந்த ஆட்சி காலம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அ.தி.மு.க.வுக்கு சனி திசை காலம் நடக்கிறது. 6-ல் இருக்கும் சனி அவ்வளவு நல்லதல்ல. அதுமட்டுமல்ல மேடையில் ஏறி தலைவர்களெல்லாம் ஜெயலலிதா அம்மையாரை கடவுளுக்கு மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அந்த அம்மையாரின் ஆத்ம சாந்திக்கு ஏதாவது செய்தார்களா? கஷ்டமல்லவா? கட்சி இப்போதும் ஒவ்வொரு நாளும் சீரழிந்து கொண்டு தான் வருகிறது.
அதற்கு காரணம் அந்த அம்மையாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கவில்லை. இன்னமும் அந்த ஆத்மா அலைந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாஸ்திர விதிப்படி அதை முதலில் செய்து இருக்க வேண்டும்.
அம்மையார் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கோவில் கோவிலாக சென்றார்கள். ரோட்டில் வைத்து கூட ஹோமம் நடத்தினார்கள். அதெல்லாம் நாடகம்தான். அதனால் எந்த பலனும் கிடைக்காது. சாஸ்திர விதிப்படி, ஆத்ம சாந்தி நடத்தினால்தான் கட்சியில் ஒற்றுமை ஏற்படும்.
அதில்லாமல் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வரலாம். தி.மு.க.வை கீழே இறக்கலாம் என்று நினைத்தால் எதுவும் நடக்காது. தி.மு.க.வுக்கும் கேது புத்தி நல்லதல்ல. ஆனால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. அஷ்ட பிரசன்னபடியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆனால் சீட் குறையும் அவ்வளவுதான்.
அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டுக்கு மேலாக போகாது. ஆத்ம சாந்தி செய்துவிட்டு இப்போது இருக்கும் தலைமையின் மைனசை மாற்ற வேண்டும். ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது. சீட் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.
என்ன மாதிரி கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. தி.மு.க.வினரை பார்த்து கடவுள் நம்பிக்கை கிடையாது என்கிறார்கள். நான் அதை நம்பவில்லை. அவர்களில் பலர் என்னிடம் வருகிறார்கள். பரிகாரங்கள் செய்கிறார்கள். எனவே தி.மு.க.காரர்களெல்லாம் நாத்திகர்கள் என்பதும் மூடத்தனம்தான்.
மறுபடியும் நாங்கள் தான் என்ற அகங்காரம் கூடாது. முக்கியமாக புகழ்ந்து பேசுபவர்களை அருகில் வைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மைனசை எடுத்து சொல்பவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.