என் மலர்
தமிழ்நாடு
ஊட்டி அருகே கோத்தர் பழங்குடியின மக்களின் கம்பட்ராயர் திருவிழா கொண்டாட்டம்
- பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
- சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியம் கலாச்சாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடித்து வருகிறார்கள்.
இயற்கையின் படைப்பில் விவசாயம் மற்றும் எருதுகள் மேய்ப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையாகும். தற்போது சமகாலத்தில் கல்வி, பொருளாதாரம் என மேம்பட்டாலும், தங்களது பாரம்பரியத்தை கைவிடாது வாழ்ந்து பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள்.
குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் அய்யனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டுகின்றனர். இதனை கம்பட்ராயர் திருவிழா எனவும் அழைக்கின்றனர்.
இவர்கள் வெளி ஆட்களை தங்களது புனித இடத்திற்குள் அனுமதிப்பது இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் வெண்ணிற ஆடை அணிந்து திருவிழாவை கொண்டாடுகின்றனர். வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான கம்பட்ராயர் திருவிழா கடந்த வாரம் ஊட்டி அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் தொடங்கியது.
முதல் நாளில் ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் கோவிலில் காணிக்கைகள் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடக்கும் இந்த விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர். நேற்று அய்யனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.
கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். கோத்தர் இன ஆண்கள் 5க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகளை இசைக்க தொடங்கினர். அவர்கள் இசைக்க தொடங்கியதும், அங்கு கூடியிருந்த கோத்தர் இன ஆண்களும், பெண்களும் வட்டமாக நின்று கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண உடைகள் அணிந்து வந்தனர். அப்போது தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனமாடினர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு இயற்கை துணைபுரிய வேண்டி இந்த திருவிழா நடைபெறுவதாக கோத்தர் இன மக்கள் தெரிவித்தனர். இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.