search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வக்கீலை கொன்று உடல் தீவைத்து எரிப்பு- வாலிபர் வெறிச்செயல்
    X

    இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற காட்சி

    வக்கீலை கொன்று உடல் தீவைத்து எரிப்பு- வாலிபர் வெறிச்செயல்

    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரி விதை ஆராய்ச்சி மையம் அருகே சந்தியான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அவரை யாரோ கொன்று உடலை எரித்துள்ளனர். இறந்து கிடந்தவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் கிடந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது திருப்பதி சாரம் கீழூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 21) என்பவர் ஒருவரை அழைத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவரை இசக்கிமுத்து கொன்றதும், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை குமாரபுரம் சரல்விளை பகுதியை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி(50) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த கிறிஸ்டோபர் சோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டோபர் சோபி கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கை விரைந்து முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இசக்கி முத்து தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் தருமாறு கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் பத்திரங்களை கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து முடிவு செய்துள்ளார் . இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக் கன்றுகள் வேண்டுமென்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து திட்டமிட்டுள்ளார். தங்களது ஊரில் வாழைக்கன்றுகள் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    சந்தியான் குளக்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழைக்கன்று இருப்பதாக கூறி அங்கு கிறிஸ்டோபர் சோபியை தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து அழைத்து சென்றார். அங்கு வைத்து கிறிஸ்டோபர் சோபியை தன்னிடம் இருந்த அரிவாளால் இசக்கிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்துவிட முடிவு செய்தார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோலை எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

    பின்பு அங்கிருந்து இசக்கிமுத்து அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததால் இசக்கிமுத்து சிக்கினார். கைது செய்யப்பட்ட இசக்கி முத்துமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வக்கீல் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரல்வாய்மொழி மற்றும் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×