என் மலர்
தமிழ்நாடு

பெண்களின் அழகை வர்ணித்தால் நடவடிக்கை- வேலூர் வி.ஐ.டி.யில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு

- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
பெண்கள் சிறுவயதிலிருந்தே அடக்குமுறையில் இருந்தே வளர்க்கப்படுகிறார்கள் பருவ வயது அடைந்தவுடன் இயல்பாக மற்றவர்களுடன் பழக முடிவதில்லை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நற்போதனைகளை வழங்க வேண்டும். நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது. யாரும் தொடவே கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சமம் என சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாதி, நிறம், உயரம் ஆகியவற்றை கொண்டு வேறுபாடுகள் வரக்கூடாது. பெண்களின் அழகை வர்ணித்தால் அவர்கள் மீது புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகாகவி பாரதியார், மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என கூறியுள்ளார்.
'நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் கல்வி கற்றால் சமூகம் மாற்றங்கள் ஏற்படும். நமது அடிப்படை உரிமைகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டவே அனுமதிக்கப்படவில்லை. தற்போது கல்பனா சாவ்லா முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதற்கு காரணம் பெண்கள் மனதிற்குள் இருக்கும் தீராத வேட்கை தான். 2 கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இவ்வாறு அவர் பேசினார்.