search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?- ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
    X

    உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?- ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

    • போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது.

    சென்னை:

    போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். டாக்டர் ராமதாசின் இந்த அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், அதில் பணிபுரியும் 1,13,741 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த 25-ந்தேதி உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரூ.182.32 கோடியானது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அறிந்தும், அறியாதது போல ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×