search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் புத்தாண்டையொட்டி ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
    X

    தமிழகத்தில் புத்தாண்டையொட்டி ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

    • சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு.
    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாளை இரவு 7 மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிவிடும்.

    சென்னை:

    2025-ம் ஆண்டு நாளை மறுதினம் (புதன்கிழமை) பிறக்கிறது. புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாளை இரவு (செவ்வாய்க்கிழமை) 7 மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிவிடும்.

    சென்னையில் மெரினா கடற்கரையில் நாளை இரவு 7 மணிக்கு மேல் மக்கள் ஒன்றுக்கூடி ஆடி-பாடி, நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியில் திளைப்பது வழக்கம்.

    எனவே மெரினா கடற்கரையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

    எனினும் தடையை மீறி யாரும் கடலில் இறங்காத வகையில் கடற்கரை மணல் பரப்பில் தற்காலிக தடுப்புகளையும், கண்காணிப்பு கோபுரங்களையும் போலீசார் அமைத்து வருகின்றனர்.

    மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற முன்னெச்சரிக்கையாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னையில் உள்ள கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    புத்தாண்டையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வரையில் சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார், ஊர்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு, ரோந்து, வாகன சோதனை போன்ற பணிகளில் ஈடுபட இருக்கின்றனர்.

    புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    புத்தாண்டை கொண்டாட மக்கள் கூடும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுப்பதற்காக முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

    அதிவேகமாக மோட்டார் சைக்கிள், கார்களை ஓட்டினால் அபராதம், வழக்கு நடவடிக்கை பாயும் என்றும், மதுபோதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆம்புலன்சு வாகனங்களை ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு போலீசார் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டம் என்று களைகட்டும் நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் அருகே யாரையும் அனுமதிக்க கூடாது.

    மது அருந்தியவர்களை பாதுகாப்பாக தனி வாகனங்கள் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது.

    நாளை நள்ளிரவு தேவாலயங்கள், வழிபாட்டுத்தலங்களுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் செல்வார்கள் என்பதால், வழிப்பறி சம்பவங்கள் நேரிடாத வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.

    கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது நள்ளிரவு 1 மணிக்குள் கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேலும் போலீசார் விதித்திருந்த கடும் கட்டுப்பாடுகளால் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×