search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலை ரெயில் தண்டவாளத்தில் பாறை சரிந்து விழுந்தது- ரெயில் போக்குவரத்து இன்று ரத்து
    X

    மலை ரெயில் தண்டவாளத்தில் பாறை சரிந்து விழுந்தது- ரெயில் போக்குவரத்து இன்று ரத்து

    • மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
    • தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்தால் அங்குள்ள உள்ள இயற்கை எழில்மிகுந்த காட்சிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீண்ட குகைகளை கண்டு ரசிக்க முடியும்.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் ரோந்து சென்றனர்.

    அப்போது மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில், ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அங்கிருந்த பாறைகள் உருண்டு, ரெயில் தண்டவாள பாதையில் விழுந்து கிடந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ரெயில்வே உயரதிகாரிகளுக்கு தகவலளித்தனர்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்த மலை ரெயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது தண்டவாளத்தில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்துவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் சென்ற மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து மலைரெயிலில் பயணித்தவர்களுக்கு கட்டண தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×