search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டங்ஸ்டன் விவகாரத்தில் அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர்- பேராசிரியர் ராம சீனிவாசன்
    X

    டங்ஸ்டன் விவகாரத்தில் அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர்- பேராசிரியர் ராம சீனிவாசன்

    • டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள்.
    • டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரிட்டாபட்டி சென்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு நிச்சயமாக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வராது என உறுதி அளித்து இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது மேலூர் பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் டெல்லி சென்ற விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அரிட்டாபட்டி கிராம மக்கள் மாலை அணிவித்து பட்டம் சூட்டி உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் ராம.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டங்ஸ்டன் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய மந்திரி மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிகல் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம்.

    தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்தபோது தான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய மந்திரி ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும். இதற்காக மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தார்.

    டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து டெல்லி சென்ற விவசாயிகள் கிஷன் ரெட்டிக்கு அரிட்டாபட்டி வர விவசாயிகள் அழைப்பு விடுத்ததாகவும், அவரும் வருவதாக ஒத்துக்கொண்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோருக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான பிரதமர் மோடிக்கும் நன்றி.

    தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டது என தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்து இந்த விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. அதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை அதற்காக தனியாக நான் பதில் கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தார்கள். மிகப்பெரிய சவாலாக இருந்தது. மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வந்து, டங்ஸ்டன் திட்டம் கிராமத்திற்கு வராது என உறுதி அளித்தார்.

    அதை ஏற்றுக்கொண்டு டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் டங்ஸ்டன் விவகாரம் பற்றி தெரிவித்தோம். எங்களிடம் விளக்கம் கேட்ட மத்திய மந்திரி தொடர்பாக பிரதமரிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறினார். நாங்கள் முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறினோம்.

    அடுத்த அடுத்த நாள் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட ஆணையை எங்களிடம் வழங்கினார்கள். இத்திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

    Next Story
    ×