search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளியில் ஒளிபரப்பப்பட்ட ரஜினி, விஜய் திரைப்படங்கள்- கல்வி அதிகாரி விசாரணை
    X

    பள்ளியில் ஒளிபரப்பப்பட்ட ரஜினி, விஜய் திரைப்படங்கள்- கல்வி அதிகாரி விசாரணை

    • விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
    • குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் இந்த பள்ளியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

    தொடர்ந்து அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

    இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதே நேரம் பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் தட்டிக் கேட்டால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று நினைத்து யாரும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று அவர்கள் கேள்வி கேட்டதோடு, பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    இதையடுத்து உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு மனதளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக கடந்த சனிக்கிழமை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

    அந்த மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

    மேலும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    Next Story
    ×