என் மலர்
தமிழ்நாடு
ராமநாதபுரம் அமீர் ஹம்சாவுக்கு மத நல்லிணக்கத்துக்கான பதக்கம்- முதலமைச்சர் வழங்கினார்
- மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார்.
- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சுமார் 700 பேருக்கு மருத்துவம் மற்றும் தேவையான உதவிகளை செய்து அவர்கள் குணம் அடைய உதவி செய்து உள்ளார்.
சென்னை:
தமிழக அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீரின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அந்த பதக்கத்தை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு (2025) 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் ஹம்சாவுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் ரூ5 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் அருப்புக்காரத் தெரு, கதவு எண். 34 என்ற முகவரியில் வசித்து வரும் எஸ்.ஏ.அமீர் ஹம்சா என்பவர் மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
எஸ்.ஏ.அமீர் ஹம்சா 'அப்பாஸ் அலி டிரஸ்ட்' என்ற பெயரில் சொந்தமாக மாருதி ஆம்புலன்ஸ் வேன் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டும், இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை போலீசார் உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்தும் வருகிறார்.
இந்த சேவையை சாதி, மத பேதமின்றி செய்து வருகிறார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார்.
கடந்த 1.9.2014 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 80 பேருடன் சென்ற பஸ் கீழக்கரை என்ற இடத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளானதில் இவரது உதவியால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இதற்காக இவருக்கு 2014-ம் ஆண்டுக்கான 'குட் சமிரிதா அவார்டு' வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்ட காலங்களில் சுமார் 200 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சுமார் 700 பேருக்கு மருத்துவம் மற்றும் தேவையான உதவிகளை செய்து அவர்கள் குணம் அடைய உதவி செய்து உள்ளார்.
இவரது சேவையானது வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்குகிறது. இவ்வாறு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வரும் எஸ்.ஏ.அமீர் ஹம்சாவை பாராட்டும் வகையில் இவருக்கு 2025-ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்பட்டது.