என் மலர்
தமிழ்நாடு
புரி கடற்கரையில் திருவள்ளுவரின் மணற்சிற்பம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
- தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் திருவள்ளுவர் உருவத்தை மணற்சிற்பமாக வரைந்தார்.
கலைஞர் சுதர்சன் பட்நாயக், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலை வடிவில் மணற்சிற்பமாக வரைந்து மரியாதை செலுத்தினார். அந்த மணற்சிற்பத்தில், "திருவள்ளுவருக்கு அஞ்சலி, பேரறிவுச் சிலை" என குறிப்பிட்டிருந்தார்.
இதைதொரடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் சுதர்சன் பட்நாயக்கின் பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த பகிர்வுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்" என குறிப்பிட்டிருந்தார்.