search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனுபவி ராஜா அனுபவி ஓராண்டுக்கு பிறகு தி.மு.க.வை மக்கள் எங்கே வைப்பார்கள் என்று தெரியாது- செல்லூர் ராஜூ
    X

    'அனுபவி ராஜா அனுபவி' ஓராண்டுக்கு பிறகு தி.மு.க.வை மக்கள் எங்கே வைப்பார்கள் என்று தெரியாது- செல்லூர் ராஜூ

    • ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.
    • 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    மதுரை:

    மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனுபவி ராஜா அனுபவி, இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரியான மாவட்ட கலெக்டரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

    உலகத் தமிழ் மாநாடு தி.மு.க. நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள், அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.

    எம்.ஜி.ஆரை யாரும் வென்றது கிடையாது. கடவுளை யாரும் கண்டது கிடையாது. 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×