என் மலர்
தமிழ்நாடு
யுஜிசி விதிகளை திருத்தியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
- பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது.
யுஜிசி விதிகளை திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் யுஜிசி விதிகளை திருத்துவதன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள் என்பது செல்லாததாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. மேலும், கல்வி சாராத நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் அபாயம் இந்த திருத்தத்தில் உள்ளது.
யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மேலும், கல்வியை மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.