என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துரோகம் செய்வது யார்?- என்ற பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
- கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
- ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் நேற்று இரவு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள்விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, அந்தியூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனை, நாய்கள் பராமரிப்பு விடுதி மற்றும் இனப்பெருக்க தடுப்பு மையம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அந்தியூர் சட்டசபை தொகுதியில் சேவல் இரட்டை இலை சின்னத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது. சில பேர் செய்த துரோகத்தால் நாம் தோல்வி அடைந்தோம். அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.
அப்போது பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிட வில்லையே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,
நேற்று முன்தினம் கோபி அருகே நடந்த பொதுக்கூட்டத்திலும், நேற்று இரவு அந்தியூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்திலும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன் என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.






