என் மலர்
தமிழ்நாடு
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
- மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது.
- முதலமைச்சரின் தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியுமல்ல; முறையுமல்ல. இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?
மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக் கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவபர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாகக் கொடுக்க முடியும்.
நியமனப் பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்து விட்டுப் போய்விடுபவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வைப் புரிந்துகொள்ள இயலாது. (மேசையைத் தட்டும் ஒலி) மத்திய அரசு கல்வித் துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது இல்லை.
வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை என வரம்பு மீறும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பும் கிள்ளிப் போட மறுக்கும் மத்திய அரசு. தனது நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசு; கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மத்திய பல்கலைக் கழகம் போன்ற ஒரேயொரு புதிய உயர்கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்காத மத்திய அரசு.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய மத்திய அரசு. மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது. சுயநலமானது. நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.
ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சாதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அப்படி இருக்கவும் முடியாது.
கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதி மன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்தத் தீர்மானத்தை நான் உங்கள் அனுமதியோடு முன்மொழிகிறேன்.
"பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது.
அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
அதன்பிறகு இந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனி தீர்மானத்தை ஏற்க இயலாது என்று கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் முதலமைச்சரின் தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.