என் மலர்
தமிழ்நாடு
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் காலணிகள் உற்பத்தி ஆலை- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
- தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
ராணிப்பேட்டை:
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்பூ தொழில் குழுமம் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையுடன் கடந்த ஆண்டு காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள் நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகள் அங்கு நடைபெற தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பனப்பாக்கத்தில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்பு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.