search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
    X

    மகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

    • ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.
    • தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கோவையில் கடந்த மாதம் 27-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நக்கீரன் கோபால் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ஓம்கார் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.

    ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். மொத்தம் 25 பேர் கைதானார்கள். அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

    இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தால் கோவையில் இன்று பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×