என் மலர்
தமிழ்நாடு
அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம்- இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
- ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
- திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரினம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்ட) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா வருகை புரிந்ததன்பேரில் 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(II)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும்.
இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
பார்வை 2-ல் காணும் குறிப்பில் 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனத்திற்கு திருக்கோவிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டால் ரெங்கமன்னார். கருடாழ்வார் மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
எனவே, இத்திருக்கோயில் மரபு படியும் பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15-12-2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.