என் மலர்
தமிழ்நாடு
சுரங்கப்பாதையில் மழை வெள்ளம்- இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை தூக்கி சென்ற உறவினர்கள்
- ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும்.
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பெட்டி நாயக்கன்பட்டியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த அய்யாவு (வயது75) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் எவ்வாறு எடுத்துச் செல்வது என்று தெரியாமல் விழித்தனர். இவர்கள் மயானத்திற்கு உடலை எடுத்து செல்லும் பாதையில் உள்ள சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்தது. இன்று காலையும் இடைவிடாமல் மழை பெய்ததால் வேறு வழியின்றி பெட்டி நாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக இடுப்பளவு தண்ணீரில் உடலை தூக்கி பிடித்து ஆற்றைக் கடப்பது போல் கடந்து சென்றனர். பின்னர் திண்டுக்கல்-திருச்சி சாலை ஓரம் உள்ள தங்களது மயானத்தில் வைத்து இறுதிச்சடங்கை செய்தனர்.
இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர், பாளையம், அய்யலூர் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீரை ரெயில்வே துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்றாலும் அந்த தண்ணீர் பல நாட்கள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.