என் மலர்
தமிழ்நாடு
மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா: முதலமைச்சர் 13-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
- தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
- ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை தரமணி, பட்டாபிராம், கோவையை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியிலும் தமிழக அரசு டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பஸ்நிலையத்துக்கு அருகில் இந்த புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
இதே போல் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதன்படி தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பூங்காவில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.