என் மலர்
தமிழ்நாடு

மார்கழி இசை கச்சேரிக்கு லுங்கி கட்டிக்கொண்டு வந்து பாடல் பாடிய டி.எம். கிருஷ்ணா

- 98 ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது.
- டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது.
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கர்நாடக இசையில் பெரியார் குறித்த பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடக இசை பிராமணமயக்கப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக பேசி வரும் டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசையை எல்லாரும் பயிலும் வகையில் சேரிகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வந்தார்.
கலைப் பன்முகத்தன்மைக்கு எதிரான சூழல் இருப்பதால் இனி மார்கழி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னதாக டி.எம்.கிருஷ்ணா அறிவித்தார். அதன்படி கடந்தாண்டு வரை மார்கழி இசைக் கச்சேரிகளில் அவர் பாடல்கள் பாடவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் சென்னை மார்கழி கச்சேரிகளில் பங்கேற்பேன் என்று டி.எம். கிருஷ்ணா அண்மையில் அறிவித்தார்.
அதன்படி மியூசிக் அகாடமியின் 98ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது. டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது. இதனால் அரங்கிற்கு வெளியே நின்றபடியே நிறைய ரசிகர்கள் கச்சேரியை கண்டு களித்தனர்.
மார்கழி இசைக் கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாரம்பரிய மரபுகளை உடைக்கும் விதமாக லுங்கியும் பீச் ஷர்ட் அணிந்து வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இசை கச்சேரியில், "ராமரோ, கிறிஸ்துவோ, அல்லாவோ எல்லா இறையருளும் ஒன்றுதான் எல்லா மனிதரும் ஒன்றுதான் என்று பொருள்படும் பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடினார். குறிப்பாக பெருமாள் முருகன் எழுதிய 'சுதந்திரம் வேண்டும்' பாடலை அவர் பாடியது அனைவரையும் கவர்ந்தது.