search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய அளவில் தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்வு- தமிழக அரசு
    X

    இந்திய அளவில் தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்வு- தமிழக அரசு

    • இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
    • பொருளாதாரத்தில் தமிழ்நாடு சாதித்த விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது

    சென்னை:

    2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து உள்ளார். அதன் அடிப்படையில் அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக தொழில்துறை கூடுதல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை எட்டும் வகையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஜப்பான், ஸ்பெயின், துபாய், அபுதாபி, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி அமெரிக்காவிற்கு சென்று அங்கு 17 நாட்கள் தங்கி இருந்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச தொழில் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில் முக்கியமானது பார்ச்சூன் 500 நிறுவனமாகும்.

    கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து முன்னெடுக்கப்பட்ட முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 7 ஆயிரத்து 974 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. அதோடு, 19 லட்சத்து 17 ஆயிரத்து 917 நேரடி வேலை வாய்ப்புகளை சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 53 ஆயிரத்து 862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    பொருளாதாரத்தில் தமிழ்நாடு சாதித்த விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி.) எடுத்துக்கொண்டால், இந்தியாவில் தமிழகத்தின் பங்கு 1960-61-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. அது 2023-2024-ம் ஆண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல், இங்குள்ள தனி நபர் வருவாயை பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டில் 171.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கை கொண்டிருக்கின்றன என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×