என் மலர்
தமிழ்நாடு
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
- வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம்.
- அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; 109 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோட்ட, மண்டல அரசு போக்குவரத்துக்கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நாளையும் (இன்று) தொடரவிருக்கிறது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுப்பது பெரும் துரோகம்.
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக்கூடாது. அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.