என் மலர்
தமிழ்நாடு
தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து: ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்போம்- திருமாவளவன்
- தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை.
- அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார். அப்போது தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசும்போது "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர்தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும்.
தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்" என்றார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் இவ்வாறு பேசியிருப்பது கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில் "மன்னராட்சி எப்போதே ஒழிக்கப்பட்டுள்ளது. மேடை பேச்சுகளில் இது போன்ற கருத்துகள், விமர்சனங்கள் வருவது இயல்புதான். இதை பொருட்படுத்த தேவையில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்குகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு கட்சி முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி முடி எடுப்போம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.