என் மலர்
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு முதல் 25 தொகுதிகள் வரை! - தி.மு.க.-வுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வி.சி.க.

- கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்.
- முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை.
கடந்த சில மாதங்களாகவே தி.மு.க.-வுக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் பேசிய வீடியோவை ஆதர் அர்ஜூனா பதிவிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாவும் இதனால் தவெக- விசிக இடையே கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.
இதை அடுத்து புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இப்படி சர்ச்சைகளில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மீண்டும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களை கேட்டுப்பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதையே தான் அனைத்து தோழர்களும் விரும்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-
தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் நாங்கள் முடிவு செய்வோம். முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.
ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 12 தொகுதி வரை நாங்கள் 2011-ல் பேசி தவிர்க்க முடியாத காரணங்களால் அதை 10 என்று இறுதி செய்தோம். ஆகவே எங்களுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம். திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்போது 25 தொகுதிகள் வரை வேண்டும் என்று கூறுவது தி.மு.க.வு.க்கு அழுத்தத்தை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.