search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெட்ரோ ரெயில் பணி: வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.பிற்கு மாற்றம்
    X

    மெட்ரோ ரெயில் பணி: வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.பிற்கு மாற்றம்

    • வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    அப்பகுதியில் வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் ஒரு புறம் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகளும் மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெறுவதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மேற்கு மாட வீதி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் வரை வில்லிவாக்கம் பஸ்நிலையம் தற்காலிகமாக ஐ.சி.எப். ரெயில்வே முன்பதிவு மையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் பஸ்கள் தற்போது ஐ.சி.எப். பஸ்நிலையத்தில் இருந்து புதிய ஆவடி சாலைவழியாக சென்று நாதமுனி வழியாக வில்லிவாக்கம் வந்து மீண்டும் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பஸ்கள் தற்காலிகமாக நேற்று முதல் ஐ.சி.எப். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    அதன்படி தடம் எண். 20, 27டி, 23வி ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று 'யூ டர்ன்' எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பஸ் நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.

    வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். தடம் எண்.22 வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், தடம் எண். 63 திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் தடம் நீட்டிக்கப்பட்டு ஐ.சி.எப். வரை இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×