என் மலர்
தமிழ்நாடு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 74 சதவீதம் உயர்ந்தது
- கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது.
- சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 74.32 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8.738 டி.எம்.சி. ஆக உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் நீர் மட்டம் 33 அடி தாண்டி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.யில் 2.573 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 3.300 டி.எம்.சி.யில் 2.755 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 228 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.860 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 322 மில்லியன் கனஅடியும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது. ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் தற்போது மேலும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12-ந்தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.