என் மலர்
தமிழ்நாடு
யார் அந்த சார்? அதிமுகவினர் கேள்வி.. இவர்தான் அந்த சார்! திமுகவினர் பதில் - களேபரமான சோஷியல் மீடியா
- சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
- சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சம்பவத்தின்போது ஞானசேகரன் மற்றொருவரிடம் போன் செய்து சார் என பேசியதாகவும், அந்த சார் உடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி விசாரணையில் கூறியதாக தழுவல் வெளியாகியது.
சார் என்று யாரும் இல்லை என்றும் பொய்யான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.
சட்டசபை கூட்டங்களிலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் யார் அந்த சார் என்ற பேட்ஜை தனது சட்டையில் குத்திக்கொண்டு வந்தனர். இந்நிலையில் திமுக தொண்டர்கள் யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளனர்.
அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் புகார் அளித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும், புகாரிலிருந்து ஒரு சிறுவனின் பெயரை நீக்க வேண்டும் என தங்களை தாக்கியதாக சிறுமியின் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு விசாரணையில் அதிமுகவின் 103வது வட்ட செயலாளர் சுதாகர், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தரப்பு சுதாகரை அணுகியதாகவும் சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதோடு புகார் அளிக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல லட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாக சுதாகர் பேசினார் என்று சிறுமி தரப்பு கூறியதை அடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சுதாகர் இருக்கும் புகைப்படங்களை வைரல் செய்து வரும் திமுக, சுதாகர் தான் அந்த சார் என டிரண்ட் செய்து வருகிறது. மேலும் சாலையில் வருவோர் போவோரிடமும் அந்த போட்டோவை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அதிமுக திமுக இடையே சண்டை மூண்டுள்ளது.