search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதி பாகுபாடு ஏன்..? மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்- அண்ணாமலை
    X

    சாதி பாகுபாடு ஏன்..? மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்- அண்ணாமலை

    • ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை வலியுறுத்தல்.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் எனவும், தேர்தல் அறிக்கையின்படி மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்?

    கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.

    தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

    நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

    உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×