search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிலி நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
    X

    சிலி நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

    • சோதனைக்காக இயக்கப்பட்ட ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.
    • பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரெயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.

    அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயிலும் அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது அந்த இரு ரெயில்களும் நேருக்குநேர் மோதின.

    இதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டி சரக்கு ரெயிலின் மீது ஏறியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று ரெயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மற்றொருபுறம் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் கேபிரியேல் போரிக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×