என் மலர்
உலகம்
பிரான்சில் அவசர நிலை பிரகடனம்
- கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றும் கனக் பழங்குடியினர் 3 பேர் கொல்லப்பட்டனர்.
- 2 விமான நிலையங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கலிடோனியா:
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் தீவு கூட்டமான நியூகால டோனியா அமைந்துள்ளது. பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த மாகாணத்தில் சுமார் 2.7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் நீண்ட காலமாக அடக்கு முறைக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் நியூகால டோனியாவில் 10 ஆண்டுக்கு மேலாக வசித்து வருபவர்கள் அந்த பிரதேச தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு அங்குள்ள கனக் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படும் எனக்கூறி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
அதே சமயம் மற்றொரு பிரிவினர் இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியது.
பிரான்சு ஆதரவு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகளும் கொளுத்தப்பட்டன. இதனால் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றும் கனக் பழங்குடியினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் நிலைமை இன்னும் மோசமானது.
இதையடுத்து கலவரத்தை ஒடுக்க நியூகாலடோனியாவில் அவசர நிலை பிறப்பித்து பிரான்சு அரசு உத்தரவிட்டது. தலைநகர் நவுமியாவில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அவசரநிலை பிரகடனம் வருகிற 12-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாக ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள 2 விமான நிலையங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.