search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசா போர், ஐ.நா. சபைக்கு விடப்பட்டு இருக்கும் சவால் - டெட்ரோஸ் அதானோம்
    X

    காசா போர், ஐ.நா. சபைக்கு விடப்பட்டு இருக்கும் சவால் - டெட்ரோஸ் அதானோம்

    • காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.

    இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×