என் மலர்
உலகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்: ஆசாத் ஆட்சி முடிவை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்
- தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
- அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியானது.
டெல் அவிவ்:
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில்,மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். ஆசாத்தின் ஆட்சி, டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான ஆபத்துகளும் உள்ளன. எங்களுடைய எல்லையைக் கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக்கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.