என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு
- இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
- இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
பெய்ரூட்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.
தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார் . இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் இதுவரை காணாத தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள்.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள். போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.
இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கபடுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்