search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கச்சத்தீவு விவகாரத்தை அரசியலுக்காக பேசுகிறார்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X

    கச்சத்தீவு விவகாரத்தை அரசியலுக்காக பேசுகிறார்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம்.
    • தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    கொழும்பு:

    கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலங்கை சென்றார். அங்கு அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் 'வீரகேசரி' பத்திரிகைக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: 2022-ம் ஆண்டு இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் நீங்கள் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா?

    பதில்: இந்த விஷயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ, கல்வியையோ தாண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதரவும், பொறுப்பும்தான் இதற்கு காரணமாகும். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் நான் அங்கம் வகித்தேன். அப்போது கிடைத்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்தது. அதேபோல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. அதனால் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் 2 ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது.

    கேள்வி: நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிறீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?

    பதில்: எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்தபோதே அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த கட்சியும் பின்வாங்கியதில்லை.

    கேள்வி: பெங்களூரு, ஐதராபாத் போல் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் எப்போது முதன்மை இடம் பெறும்?

    பதில்: கருணாநிதி ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை. அதில் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.

    கேள்வி: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். இது சாத்தியமா?

    பதில்: இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு. அதை அடைவதற்காக நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

    கேள்வி: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியுமா?

    பதில்: இது விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.

    கேள்வி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசின் விஷயம் என்றாலும், மாநில அரசின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.

    கேள்வி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமா?

    பதில்: சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன? செலவு என்ன என்பது முக்கியமாகும். பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் சாத்தியமானதுதான்.

    இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

    Next Story
    ×