என் மலர்
உலகம்

தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை - ஐ.நா.வில் சினந்த இந்தியா!

- காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீரில் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானின் தலைவர்கள், அதிகாரிகள் அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த கவுன்சிலின் நேரத்தை, சர்வதேச உதவிகளை நம்பி வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு தொடர்ந்து வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், அதன் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதன் திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள் ஆகும்.
சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களை பாகிஸ்தான் தூண்டி வருகிறது. அதே நேரத்தில் அதன் சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமே அங்குள்ள நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான அரசின் உறுதிப்பாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இந்த வெற்றிகள் ஒரு சான்றாகும். பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.
ஒரு நாடாக, பாகிஸ்தான் மனித உரிமைகளை மீறுவதன் மூலமும், சிறுபான்மையினரை ஒடுக்குவதன் மூலமும், ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணிப்பதன் மூலமும் தனது கொள்கைகளைத் திணிக்கிறது.
ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிக்கிறது. எனவே பாகிஸ்தான் யாருக்கும் உபதேசம் செய்யும் நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.