search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
    X

    ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

    • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    மாஸ்கோ:

    இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்று தொடங்கியது.

    இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினிடம், உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வுகாண உதவுவதற்கு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்து பேசினார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமும் தூதரக ரீதியிலும் அணுக மோடி அழைப்பு விடுத்தார்.

    அப்போது மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்தார்.

    பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இரு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

    2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

    ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    இதற்கிடையே எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில். மோடி-ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×