search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வாக்னர் போராளிகளுக்கு விசுவாச பத்திரம் கட்டாயம்: புதின் அதிரடி
    X

    வாக்னர் போராளிகளுக்கு விசுவாச பத்திரம் கட்டாயம்: புதின் அதிரடி

    • புதினுக்கு எதிராக எவ்ஜெனி ஒரு கிளர்ச்சியை தொடங்கினார்
    • மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்தில் எவ்ஜெனி உயிரிழந்தார்

    உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70).

    தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அவரே அதிபராக இருந்து வருகிறார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை உக்ரைன் கடுமையாக எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் போரிட்டு வருகிறது. ரஷிய-உக்ரைன் போர் 540 நாட்களை கடந்து இன்று வரை தொடர்து வருகிறது.

    இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு, அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு எனும் கூலிப்படையும் உதவி வந்தது.

    கடந்த ஜூன் மாதம், எதிர்பாராத விதமாக வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய ராணுவத்திற்கு எதிராகவும், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவும் ஒரு கிளர்ச்சியை தொடங்கினார். இந்த கிளர்ச்சி பெரிதாகி விடாமல் திறமையாக புதின் தடுத்ததால், பிரிகோசின் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

    இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள பகுதியில் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் எவ்ஜெனி பயணிக்கும் போது, அது விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.

    இந்நிலையில் தற்போது உள்ள வாக்னர் குழு வீரர்களுக்கு புதின் ஒரு புது உத்தரவு போட்டிருக்கிறார். ரஷிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளமான கிரெம்ளின் தனது வலைதளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்த அறிக்கையில், "ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷியாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரஷியாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறது.

    இதன் மூலம் ரஷியாவில் உள்ள வாக்னர் மற்றும் பிற தனியார் ராணுவ அமைப்பினரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ள புதின் முயல்கிறார் எனும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×