என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![முடங்கிய வாக்னர் கலகம்: கண்ணில் படாத ரஷிய ராணுவ உயரதிகாரிகள் முடங்கிய வாக்னர் கலகம்: கண்ணில் படாத ரஷிய ராணுவ உயரதிகாரிகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/29/1906541-2906russia001.webp)
முடங்கிய வாக்னர் கலகம்: கண்ணில் படாத ரஷிய ராணுவ உயரதிகாரிகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் பெலாரஸில் தஞ்சம்
- ஆயுத கிளர்ச்சி குறித்து ஏன் முன்கூட்டிய அறியவில்லை என்பது குறித்து புதின் விசாரணை
சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.
தற்போது புதின், வாக்னர் கலகத்திற்கான பின்னணியில் இருந்தவர்களையும், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முயற்சி செய்யாதவர்களையும் மற்றும் ஒரு தீர்மானம் இல்லாத மனநிலையில் செயல்பட்ட ராணுவ அதிகாரிகளையும் இனம் கண்டு களையெடுக்க தேவையான உயர்மட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதாக தெரிகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் ரஷியாவின் மூத்த ராணுவ ஜெனரல்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகிவிட்டனர்.
ரஷியாவின் உயர்மட்ட ஜெனரல் வாலெரி செராசிமோவ் (67), பொது இடங்களிலோ அல்லது அரசு தொலைக்காட்சியிலோ காணப்படவில்லை. ஜூன் 9 முதல் அவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
செராசிமோவ் ரஷியா உக்ரைனுடன் நடத்தும் போரில் ரஷிய துருப்புகளுக்கான தளபதியாக செயல்படுபவர். அவரிடம் ரஷியாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான 3 முக்கிய பெட்டிகளில் ஒன்று எப்போதும் இருக்கும் என்றும் தெரிகிறது.
அதேபோன்று துணைத்தளபதியும், ஜெனரல் ஆர்மகெடோன் என்ற அடைமொழி உடையவருமான ஜெனரல் செர்ஜி சுரோவிகின் மக்கள் பார்வையில் காணப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன.
ஆனால், இவற்றை உறுதி செய்யும் வகையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.