என் மலர்
உலகம்
'தப்பித்து செல்ல நான் நினைக்கவில்லை'.. ரஷியாவிலிருந்து சிரிய அதிபர் ஆசாத் அறிக்கை
- சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கிருந்து தப்பிக்கத் தான் திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலுக்கு அதிபர் பஷர் அல்-அசாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சிரியாவிலிருந்து நான் வெளியேறியது திட்டமிடப்பட்டதோ அல்லது போரின் இறுதி நேரத்தில் நடந்ததோ அல்ல. மாறாக, நான் டமாஸ்கஸில் இருந்தேன், டிசம்பர் 8, 2024 அன்று அதிகாலை வரை எனது வேலைகளை செய்தேன்.
பின்னர் தனது ரஷிய கூட்டாளிகளுடன் இணைந்து ஹெமிமிம் விமான தளத்தில் 'போர் நடவடிக்கைகளை மேற்பார்வையிட' லதாகியாவிற்கு சென்றேன். அங்கு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாஸ்கோவில் உள்ள தலைமை எங்களை ரஷ்யாவிற்கு வெளியேற்ற உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தின் போது எந்த நேரத்திலும் நான் பதவி விலகுவதையோ அல்லது அடைக்கலம் தேடுவதையோ நினைத்து பார்க்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.